புயல், கனமழை காலக்கட்டங்களில் சென்னையை பொறுத்தவரை, தாழ்வான பகுதிகளில் மட்டுமே மழைநீர் புகுந்துவிடும். ஆனால், இம்முறை மேடான பகுதிகளிலும் சேர்த்தே மழைநீர் புகுந்துவிட்டது. இதனால், பாதுகாப்பான இடங்களை தேடி செல்லும் நிலைமை ஏற்பட்டது. நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து வீடுகளில் தேங்கி இருப்பதாலும், இன்னும் வெள்ளம் வடியாமல் மழைநீர் தேங்கி உள்ள சூழலில், கொசு உற்பத்தி அதிகரிப்பதாலும் பருவகால நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், சளி, காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையை நாடி வருகின்றனர்.
இதனை தடுக்கவே தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களிலும், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.