சர்வதேசப் பொருளாதாரம் 1970-ஆம் ஆண்டுக்கு பிறகு மந்த நிலையை நோக்கி செல்வதாகவும், தற்போதே அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டதாகவும் உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இதனால், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கம் குறையும் என இந்த நாடுகள் நம்புகின்றன.
ஆனால், வட்டி விகிதங்களை உயர்த்துவதால், முதலீடுகள் குறைவதோடு வேலைவாய்ப்பின்மையும் உருவாக வாய்ப்புள்ளதால் பொருளாதார வளர்ச்சி குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. வட்டி விகிதங்களை உயர்த்துவது, கொரோனா பரவலுக்கு முன் இருந்த பொருளாதார நிலைக்கு செல்ல உதவிகரமாக இருக்காது என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதனை தடுக்க சர்வதேச அளவில் உற்பத்தியை அதிகரிப்பதோடு, விநியோகச் சங்கிலி தடைபடாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்” என உலக வங்கி ஆலோசனை கூறியுள்ளது.