பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடு பிடித்து இருக்கிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறி வருவதும் தொடர்ந்து வருகிறது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை திமுக அரசின் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
ஆளும் திமுக அரசை ஊழல் நிறைந்த கட்சி மற்றும் வாரிசு அரசியல் செய்யும் கட்சி என குற்றம் சாட்டிய அவர் ‘திமுக ஆவணங்கள்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்து பழைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்குகளை பொதுமக்களிடம் பேசி வருகிறார். ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் அவர் இது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை மக்களிடம் கூறி வருவது தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில் திமுக ஆட்சியில் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் அண்ணாமலை. மேலும் இந்திய தேசத்தின் கஞ்சா தலைநகரமாக தமிழகம் விளங்கி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா மற்றும் சாராயத்திற்கு அடிமையாக இருப்பதை காணும் போது எந்த ஒரு பெற்றோரும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் பிரதமர் மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக மக்களும் பிரதமர் மோடியின் கரத்தை இந்த முறை வலுப்படுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.