சென்னை ஆர்.கே.நகரைச் சேர்ந்தவர் ராஜா முஹம்மது (26). இவர் கடந்த ஒரு ஆண்டாக திருவள்ளூர் லங்காகார தெருவில் இருக்கும் அவரது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் அங்கிருக்கும் இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், ராஜா முஹம்மது சவூதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் ஒருவருடன் சிக்னல் என்ற செயலியின் மூலம் பேசி வருவதாக குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அந்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு சென்னை குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு காவல்துறையினர் ராஜா முகமதுவை கைது செய்தனர். கைது செய்த பின்னர் ராஜா முஹம்மதிடம் மணவாள நகர் காவல் நிலையத்தில் வைத்து சுமார் 18 மணி நேரம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ) மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், சட்டவிரோதமாக செயல்படும் சிக்னல் என்ற சமூக வலைதளத்தில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பவர்களுடன் பேசியதாகவும், அந்த செயலியில் பேசிய நபர் ராஜா முஹம்மதுவை சவுதிக்கு வரும்படி அழத்ததாகவும், அதற்கான பாஸ்போர்ட் ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் கூறியுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ராஜா முஹம்மது, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால் அவரை திருவள்ளூர் டவுன் காவல்துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து குற்றவியல் நடுவர் நீதிபதி மூகாம்பிகை முன்னிலையில் ஆஜர் படுத்தி பலத்த காவல் துறை பாதுகாப்புடன் சிறையில் அடைத்தனர்.