பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பிரபல தென்னிந்திய நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் முதன்முறையாக, ஒரு இசைக்கலைஞராக, பாரதரத்னா விருது பெற்று பெருமை சேர்த்தவர் மதுரைச்சேர்ந்த சண்முகவடிவு சுப்பு லட்சுமி. இவரை திரைத்துறையில் அனைவரும் எம்.எஸ். சுப்புலட்சுமி என்று அழைப்பர். இவரது வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படம் வருகிற 2025ம் ஆண்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
பெங்களூரைச்சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றும், கர்நாடகாவைச் சேர்ந்த முன்னணி இயக்குநர் குழுவும் படத்திற்கு முந்தைய பணிகளை தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்க போவது யார் என்பதை விரைவில் முடிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் இந்த பாத்திரத்திற்காக நடிகர்கள் த்ரிஷா, ராஷ்மிகா அல்லது நயன்தாராவை தேர்வு செய்ய படக்குழுவினர் ஆர்வமாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இசைத்துறையில் பாரத ரத்னா விருது வென்ற முதல் இசைக்கலைஞர் என்ற பெருமைக்குரியவராக எம்.எஸ். சுப்புலட்சுமி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.