மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் டீச்சர் ஆப் என்ற புதுமையான டிஜிட்டல் தளத்தை டெல்லியில் வெளியிட்டார். இது 21-ம் நூற்றாண்டு வகுப்பறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் எதிர்காலத்திற்குத் தயாராகும் திறன்களுடன் கல்வியாளர்களைத் தயார் செய்வதன் மூலம் இந்தியாவில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட புதுமையான டிஜிட்டல் தளமாகும். பாரதி எண்டர்பிரைசஸின் தொண்டு நிறுவனமான பாரதி ஏர்டெல் அறக்கட்டளை இந்த தளத்தை உருவாக்கியுள்ளது.
கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தச் செயலி தொடர்ச்சியான திறன் வளர்ப்பு, புதுமையான பாடத்திட்ட உள்ளடக்கம், தொழில்நுட்பம், சமூகத்தை உருவாக்கும் அம்சங்கள் ஆகியவற்றின் மூலம் ஆசிரியர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிகாரம் அளிக்கும் என்று கூறினார். எதிர்கால தலைமுறையை வடிவமைக்கும் உண்மையான கர்மயோகிகள் ஆசிரியர்கள் என்று குறிப்பிட்ட அவர், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் உணர்வுக்கு ஏற்ப அவர்களின் தொடர்ச்சியான திறன் வளர்ப்பில் அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
அறிவார்ந்த ஆசிரியர்கள் அறிவார்ந்த மாணவர்களை உருவாக்குகிறார்கள் என்று கூறிய அமைச்சர், அறிவுசார்ந்த 21-ம் நூற்றாண்டில் இந்தியா முன்னேறி வரும் நிலையில், எதிர்கால வாய்ப்புகளை அடையாளம் காண்பதிலும், நாட்டின் வளர்ச்சிக் கதையை நமது இளைஞர்கள் வழிநடத்துவதை உறுதி செய்வதிலும் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்றார். கள அனுபவம், கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய ஆழமான புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில், டீச்சர்ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. புதுமையான டிஜிட்டல் வளங்கள் மூலம் காலத்தை வென்ற, எதிர்காலத்திற்கு தயாரான திறன்களை இந்த தளம் அவர்களுக்கு வழங்கும்.
ஆசிரியர்களின் நேரடி உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த பயனர்-மையப்படுத்தப்பட்ட, இலவச பயன்பாட்டு ஆப், ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட் செல்பேசிகளில் அணுகக்கூடியதாகும். எதிர்கால தயார்நிலையை வளர்ப்பதற்கும், கற்பித்தல் நடைமுறைகளை உயர்த்துவதற்கும், வகுப்பறைகளில் மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் இதன் தரவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைந்து,அதிகரித்துவரும் கல்வியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள கல்வியாளர்களை உருவாக்குவதை இந்த செயலி கநோக்கமாகக் கொண்டுள்ளது.