பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் எந்த வித வேறுபாடும் இல்லை என்றும் இருவருக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் மாநில அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பெற்றோர் அல்லாத அனாதை குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த இட ஒதுக்கீடானது பெற்றோர்களால் கைவிடப்பட்ட 2 குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று NEST India Foundation என்ற தொண்டு அறக்கட்டளை சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ்.பட்டேல் மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனாதைகளின் வரையறையை நாங்கள் கவனிக்கிறோம். அதில் சட்டபூர்வமாக பெற்றோர் அல்லாத பாதுகாவலர் குழந்தையை பராமரிக்க முடியாமல் இருந்த குழந்தைகளுக்கும் அனாதை குழந்தைகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அனாதை குழந்தைகள் மட்டுமே அரசு இட ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் என்பதால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க முடியும். மாறாக கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு சான்றிதழை வழங்க முடியாது என அரசு வழக்கறிஞர் பூர்ணிமா கந்தாரியா வாதிட்டார். மேலும், அனாதை குழந்தைகளை பராமரிக்க யாரும் இல்லை. ஆனால், கைவிடப்பட்ட குழந்தைகளை பராமரிக்க ஆட்கள் இருக்கிறார்கள். எனவே, இருவரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள், அனாதை குழந்தையை விட கைவிடப்பட்ட குழந்தை எந்த அடிப்படையில் உயர்ந்தது என்று அரசு கருதுகிறது? என்பதை விளக்குமாறு கேட்டுக் கொண்டனர். இரண்டு குழந்தைகளுக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது என்றும் இட ஒதுக்கீட்டுக்காக அனாதை குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் என வேறுப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இது முற்றிலும் அர்த்தமற்றது என்று கூறினார். மேலும்,மிகக் குறைவான அதிகாரத்துவத்தையும், அதிகமான அக்கறையையும் தான் அரசிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், பெற்றோர்கள் குழந்தைகளை விட்டு சென்றுவிட்டால் அதனை காரணம் காட்டி கைவிடப்பட்ட குழந்தைகள் என சுட்டிகாட்டி சான்றிதழ் தர மறுப்பது மோசமான செயல் என கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, இரண்டு சிறுமிகளின் பெற்றோர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்ற காவல்துறையின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் தற்போது பெரியவர்களாக இருந்தாலும், கடந்த காலத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் என்பதை உறுதிப்படுத்தி, அனாதை குழந்தைகளுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கி அதற்கான சான்றிதழை அரசு வழங்குமாறு உத்தரவிட்டனர். மேலும், சம்பந்தபட்ட இரு பெண்களுக்கும் உரிய சான்றிதழை மாநில அரசு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.