75-வது குடியரசு தின விழாவில் பழங்குடியின தம்பதி பங்கேற்க உள்ளனர் .
ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெறும். இந்த அணிவகுப்பை காண்பதற்காக வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும், பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் 75வது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க வால்பாறை கல்லார்குடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின தம்பதியான ராஜலட்சுமி – ஜெயபால் டெல்லி செல்ல உள்ளனர். அறவழியில் போராடி நில உரிமைகளை பெற்று தந்து, தனது கிராமத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த முன்மாதிரி கிராமமாக மாற்றியதற்காக குடியரசு தின விழாவிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.