முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர்கள் புடைசூழ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உதயநிதிக்கு சால்வை அணிவித்து மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து வாழ்த்து..!
தெளிவாய் உள்ளது கொள்கை
திடமாய் உள்ளது இயக்கம்
ஒளியாய் உள்ளது பாதை
உழைப்பதுதான் உன் வேலை
பின்னோரை முன்னேற்ற
முன்னோரைப் பின்பற்று
உதயநிதிக்கு
இதய வாழ்த்து
கமல்ஹாசன் வாழ்த்து..!
”தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்“ என்று தெரிவித்துள்ளார்.