வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்யும் பணிகளில் பிசியாக இருக்கிறார் வெற்றிமாறன். அப்படத்திற்கான படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்டாலும், அதற்கான பேட்ச் ஒர்க் மற்றும் பின்னணி பணிகளை சில மாதங்கள் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. விடுதலை 2ஆம் பாகத்தை ரிலீஸ் செய்த பின்னர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இப்படத்திற்கான அறிவிப்பு கடந்த 2020ஆம் ஆண்டே வந்தாலும், அப்படத்தின் ஷூட்டிங்கை இன்னும் தொடங்காமல் உள்ளனர். இடையே இப்படத்தை டிராப் செய்ய உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த படக்குழு, விடுதலை 2ஆம் பாகத்தின் பணிகள் முடிந்ததும் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை இயக்குவார் என அறிவித்தது.
இதுவரை இப்படத்தின் டெஸ்ட் ஷூட் மட்டும் நடத்தப்பட்டது. அதில் சூர்யா, காளையை அடக்கும்படியான சில காட்சிகளை படமாக்கி அதனை சூர்யாவின் பிறந்தநாளன்று கிளிம்ஸ் வீடியோ போல் வெளியிடப்பட்டிருந்தது. அண்மையில் வாடிவாசல் படத்தின் சிஜி பணிகளை மேற்பார்வையிடுவதற்காக இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்றிருந்தார். அங்கு புகழ்பெற்ற சிஜி நிறுவனத்தின் மூலம் தான் ஜல்லிக்கட்டு காளைகள் சம்பந்தமான காட்சிகளை தத்ரூபமாக கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது வாடிவாசல் படத்தில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வாடிவாசல் படத்தின் ஓடிடி உரிமை முதலில் ஆஹா ஓடிடி தளம் கைப்பற்றி இருந்த நிலையில், தற்போது அதனை ஜீ5 நிறுவனத்துக்கு மாற்றி உள்ளார்களாம். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே வாடிவாசல் படத்தில் நடந்துள்ள இந்த அதிரடி மாற்றம் பற்றி தான் தற்போது பரபரப்பாக பேசி வருகிறார்களாம். கலைப்புலி தாணு தயாரிக்க உள்ள வாடிவாசல் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.