தவெக ஆட்சி அமைந்த 4 மாதங்களில் பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யை கேட்டு ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?
இது யார் வீட்டுக் காசு சார்? அதிமுகவில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழ தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது. இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவை சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
Read More : வங்கக்கடலில் திடீர் திருப்பம்! அடுத்த 48 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்! தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!



