கால்நடைகளைத் தாக்கும் வைரஸ் மனிதரின் உயிரைப் பறித்த சம்பவம் ஐரோப்பாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஷமோண்டா வைரஸ் தொற்றால் பிரான்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸ் மனிதர்களுக்கு எந்த அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், ஒரே ஒரு உயிரிழப்பை வைத்து இது பெருந்தொற்றாக மாறும் எனக் கருத முடியாது.
இந்த வைரஸ் மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்துவது மிகவும் அரிதானதாகவே இதுவரை அறியப்பட்டுள்ளது. பிரான்ஸில் உயிரிழந்த நபருக்கு ஏற்கெனவே கடுமையான உடல்நலப் பிரச்சினைகளும், குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தியும் இருந்துள்ளன. அவருக்கு ஏற்பட்ட மூளைப் பாதிப்புக்கும் ஷமோண்டா வைரஸுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, உயிரிழப்புக்கான காரணம் முழுமையாக உறுதியாகும் வரை எச்சரிக்கையுடன் தகவல்களை அணுகுவது அவசியம்.
கால்நடைகளிடமிருந்து மனிதர்களுக்கு எப்படி பரவுகிறது?
ஷமோண்டா வைரஸ் கடிக்கும் சிறிய ஈக்கள் மூலம் பரவுகிறது. மாடுகள் இந்தத் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. செம்மறியாடுகள், ஆடுகள், குதிரைகள் மற்றும் அல்பாக்கா வகை விலங்குகளிடமும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கால்நடைகளின் இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் ஷ்மாலன்பெர்க் வைரஸ் இடம்பெற்றுள்ள அதே குழுவைச் சேர்ந்தது ஷமோண்டா வைரஸ்.
கால்நடைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பால் உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். கருச்சிதைவு ஏற்படுவதுடன், கருவில் வளரும் குட்டிகளின் உடல் உறுப்புகளிலும் கடுமையான குறைபாடுகள் உருவாகலாம். சில குதிரைகளிடம் நரம்பியல் தொடர்பான பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
ஆப்பிரிக்காவில் தொடங்கி ஐரோப்பாவுக்கு வந்த வைரஸ்!
1965ஆம் ஆண்டு நைஜீரியாவில் மாடுகளிடம் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஷமோண்டா வைரஸ், பின்னர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் பரவியது. இந்த ஆண்டு ஜூலை இறுதியில் ஐரோப்பாவில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் கால்நடைகளிடம் பாதிப்பு பதிவாகியுள்ளது.
கிழக்கு பிரான்ஸில் கால்நடைகளிடையே வைரஸ் பரவியிருந்த சூழலில், அங்கு கடிக்கும் சிறிய ஈக்கள் மூலம் உயிரிழந்த நபருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
புதிய வைரஸ் அச்சுறுத்தலா?
கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை முடக்கிப் போட்ட அனுபவம் இருப்பதால், புதிய வைரஸ் பாதிப்புகள் குறித்த செய்திகள் இயல்பாகவே கவலையை ஏற்படுத்துகின்றன. ஆனால், கால்நடைகளிடம் பரவும் வைரஸ் மனிதர்களிடமும் கண்டறியப்பட்டது என்பதற்காகவே அது பெரிய அளவில் மனிதர்களைப் பாதிக்கும் என்று முடிவு செய்ய முடியாது.
ஷமோண்டா வைரஸின் புதிய வகைகள் நீண்டகாலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. மனிதர்களிடையே பரவலான பாதிப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்களும் தற்போதைய தகவல்களில் இல்லை. அதே நேரத்தில், வைரஸின் பரவல், அதன் தாக்கம் மற்றும் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகிறது.
Also Read: பள்ளி முதல் கல்லூரி வரை… மாணவர்களின் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கிய தமிழக அரசு..



