சென்னை, அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் இபிஎஸ் இரு அணிகளுக்குள் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ள வானகரம் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் 90 சதவீதம் ஏற்பாடு செய்து விட்டனர். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இன்று இரவுக்குள் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு நாளை காலை ஒன்பது மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே அதிமுக பொதுக்குழு நடக்குமா? நடக்காதா? என்பது தெரியவரும். நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று இரு தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். நாளை உயர் நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் உடனடியாக மேல்முறையீடு செய்ய முடியுமா? அதன் மூலம் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவை தடுத்து நிறுத்த முடியுமா? என்றெல்லாம் ஆலோசனை நடத்தினார். இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடக்குமா? என்பது அனைவருக்கும் தொடர்ந்து எதிர்பார்ப்பையும், கேள்விக்குறியையும் எழுப்புகிறது.
ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் பொதுக்குழுவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில், வைத்துள்ளனர். நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கும் பட்சத்தில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யவும் அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.