தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், இன்று 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சராக பதவியேற்ற விஜயுடன் மேலும் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். நேற்று காலை நீலாங்கரையில் உள்ள இல்லத்திலிருந்து நேரு ஸ்டேடியத்திற்கு புறப்பட்ட விஜய், வெள்ளை நிற முழுக்கை சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து வந்திருந்தார்.
பின்னர் பதவியேற்பு விழா மேடைக்கு செல்லும் போது கருப்பு நிற கோட் சூட்டில் வந்தது அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்தது. தமிழக அரசியலில் முதலமைச்சர் என்றாலே வேட்டி, சட்டை என்ற பாரம்பரிய அரசியல் தோற்றம் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், அந்த பாணியை மாற்றும் வகையில் விஜய் மேற்கத்திய உடை அணிந்து பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது புதிய அரசியல் அடையாளமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சராக பதவி ஏற்றப்பின் தவெக தலைவர் விஜய் முதல் முறையாக சட்டமன்ற வந்தார். சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் வருகை தந்தனர். முதலமைச்சர் விஜய் இன்று மீண்டும் கோட் சூட்டில் சட்டசபைக்கு வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் இருக்கையில் விஜய் அமர்ந்திருக்க எதிரே எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருந்தார். புதிய எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ முதலமைச்சர் விஜய் உறுதி மொழி ஏற்று பதவி ஏற்றார்.
அதனை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் வரிசையாக பதவி ஏற்றனர். அதன்பின்னர் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, ஒபிஎஸ் பதவி ஏற்றனர். தொடர்ந்து தேர்தலி வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
Read more: பெரும்பாலான மக்கள் புறக்கணிக்கும் புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!



