நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 75 இடங்களில் வெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 55 கூட்டணி இடங்களிலும் வெற்றி பெற்று 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது..
ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ம் தேதி ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து 9 அமைச்சர்களும் தலைமை செயலகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார். காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புகிறார்.
சமூக நீதி அடிப்படையில் இயங்கும் கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும். அமைச்சரவையில் இடம் பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அழைக்கிறோம். இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கும் அமைச்சரவையில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து தவெக அரசின் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நல்ல எதிர்கட்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டிருக்க வேண்டும்.
தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர திமுக – அதிமுக இணைந்து செயல்பட்டன. திமுக உடன் இணைந்து பின்புற வாசல் வழியாக முதலமைச்சர் ஆக எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்தார். அதிமுகவை காப்பாற்ற வேண்டும். அதிமுகவையில் டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. நம் முதலமைச்சர் விஜய் எம்.ஜி.ஆர் மீது அன்பு கொண்டவர். அவர் உருவாக்கிய அதிமுகவை உடனடியாக காப்பாற்ற வேண்டும். அதிமுகவை தமிழக வெற்றிக் கழகம் தோழமையோடு தான் அணுகுகிறது எனத் தெரிவித்தார்.
Read more: ‘ரோமுக்கு நல்வரவு, என் நண்பரே!’: பிரதமர் மோடியின் இத்தாலி பயணம்.. செல்ஃபி எடுத்த ஜார்ஜியா மெலோனி..!



