முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு வரலாற்றில் முதல் முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது.
இன்று காலை 9.30 மணி முதல் சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.எல்.ஏக்கள் யார் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பது பொதுமக்கள் நேரடியாக அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இவ்வாறு முழுமையான நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலையில் காட்டப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, பின்னர் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றதாக அறிவித்தது. அதன் அடிப்படையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கி விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே அரசியல் சூழல் சில மாற்றங்களையும் சந்தித்துள்ளது. திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ தொடர்பான தேர்தல் வழக்கில், உயர்நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதித்திருப்பதால் எண்ணிக்கையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமமுக எம்.எல்.ஏ காமராஜ் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசிய பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது சுயேட்சை எம்.எல்.ஏவாக உள்ள காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் காரணமாக சில எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.
இந்த சூழலில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு, விஜய் தலைமையிலான அரசின் பெரும்பான்மையை உறுதி செய்யுமா அல்லது புதிய அரசியல் திருப்பங்களை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேரலை ஒளிபரப்பின் மூலம் ஒவ்வொரு வாக்கும் வெளிப்படையாக தெரியவிருப்பதால், தமிழக அரசியல் இன்று முழுமையாக நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Read more: முதலமைச்சர் விஜயின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது..? அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்..!



