திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கும், தற்போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெளிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் திமுக தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்ததாக தெரிவித்தார். அப்போது, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.
அந்த சந்திப்பில், “நாங்கள் நல்ல ஆளும் கட்சியாக இருந்தோம். இனி நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம்” என்று ஸ்டாலின் தெரிவித்ததாக சண்முகம் கூறினார். மேலும், “புதிய அரசு எப்படி செயல்படுகிறது என்பதை ஆறு மாதங்கள் கவனிப்போம். அதன் பிறகு குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுவோம்” என்பதே திமுகவின் நிலைப்பாடு என ஸ்டாலின் கூறியதாகவும் அவர் விளக்கமளித்தார்.
ஆனால் தற்போது திமுகவினர் வெளிப்படுத்தும் கருத்துகள் அதற்கு முற்றிலும் மாறுபட்டுள்ளதாக சண்முகம் குற்றம்சாட்டினார். “ஒவ்வொரு விஷயத்திலும் குற்றம் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்” என்று அவர் விமர்சித்தார்.
மேலும், தேர்தலில் ஸ்டாலின் தோல்வியடைந்தது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, கொளத்தூர் தொகுதிக்காக ஸ்டாலின் செய்த பணிகளை மக்கள் நேரில் சென்று பார்ப்பார்கள் என்றால் உண்மை புரியும் என்றும் கூறினார். “ஒரு தொகுதிக்காக நல்லது செய்தாலே வெற்றி கிடைக்கும் என்று நினைக்கக் கூடாது. மக்கள் நினைத்தால் எவ்வளவு செய்தவராக இருந்தாலும் தோற்கடிக்க முடியும் என்பதற்கே கொளத்தூர் ஒரு உதாரணம்” என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், “ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் ஒரே நாளில் நிறைவேற்றவில்லை. ஐந்தாவது ஆண்டில்தான் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுபோல தற்போது ஆளும் கட்சிக்கும் தேவையான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்றும் சண்முகம் கூறினார்.
Read more: Breaking : அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு..!



