சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்ததோடு, கொளத்தூர் தொகுதியிலும் ஸ்டாலின் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நேரில் சென்று அவரை சந்தித்து பேசியிருந்தார். அதன் பிறகு, திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அந்த கூட்டணிக்கான “விதை” போட்டதே ரஜினிகாந்த்தான் என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவின.
இதற்கிடையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்றது குறித்து விமான நிலையத்தில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, வாழ்த்து தெரிவிக்காமல் ரஜினிகாந்த் அங்கிருந்து சென்ற வீடியோவும் வைரலானது. இதனால், “தன்னால் முடியாததை விஜய் செய்து விட்டதால் ரஜினிக்கு பொறாமை” என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், “ஸ்டாலினுடனான என்னுடைய நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் கொளத்தூரில் தோல்வியடைந்ததை ஏற்க முடியாமல் நேரில் சென்று சந்தித்தேன். விமான நிலையத்தில் என்னிடம் கேள்வி கேட்டவர் செய்தியாளர் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் போன் மூலம் மட்டுமே வீடியோ பதிவு செய்ததால் சாதாரண நபர் என நினைத்தேன்” என்றார்.
மேலும் விஜய் குறித்து பேசிய ரஜினிகாந்த், “விஜய் வெற்றி பெற்றது எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. சினிமா புகழினால் மட்டுமே அவர் வெற்றி பெற்று முதல்வர் ஆகியுள்ளார். விஜய் மீது எனக்கு எந்த பொறாமையும் இல்லை. ஒருவேளை கமல்ஹாசன் முதல்வராகியிருந்தால் பொறாமை வந்திருக்கலாம். விஜயை என்னுடன் ஒப்பிட மாட்டேன். தேர்தல் முடிவுகள் வெளியானதும் சமூக வலைதளத்தில் அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்திருந்தேன்” என்று கூறினார்.
“60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சிகளிடமிருந்து மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தனர். அந்த சூழலில் விஜய் வந்து வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். அதேசமயம் “புதிய அரசின் மீது மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை அவர்கள் நிச்சயம் பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன். குறைந்தது ஒரு அல்லது இரண்டு ஆண்டுகள் அவர்களை வேலை செய்ய மக்கள் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றார்.



