விசிக தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் ஆட்சி அமைக்காமல் தடுக்க திமுக மற்றும் அதிமுக கூட்டணி முயற்சிகள் உண்மையிலேயே நடந்ததாக, திருமாவளவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய சூழலில் புதிய அரசியல் கூட்டணி முயற்சிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “திமுக – அதிமுக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான்.. இது குறித்து என்னிடம் கருத்து கேட்டபோது, “அப்படி நடந்தால் திமுகவிற்கே அது பாதிப்பாக மாறும்” என தாம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் சந்திப்பு நடத்தியதாகவும், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தனித்தனியாக அழைப்பு வந்ததாகவும் திருமாவளவன் கூறியுள்ளார். அந்த சந்திப்பில், புதிய அரசியல் சூழ்நிலையில் திமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்படுவது குறித்த கருத்துகள் பேசப்பட்டதாகவும், இதை தாம் நேரடியாக மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதே நிலைப்பாட்டை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
நான் முதல்வராகவும், என்னுடன் எடப்பாடி உள்ளிட்ட இருவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார்கள் என அதிமுக தரப்பில் பேசுவதாக திமுகவில் இருந்து தகவல் வந்தது. அப்படி ஒரு நிலை வந்தால் வெளியில் இருந்து நாங்கள் ஆதரவளிப்போம். அட்சி அதிகாரத்தில் வரமாட்டோம். தமிழ் நாட்டில் இதெல்லாம் நடக்குமா, சாத்தியமே இல்லை என நான் சொன்னபோது, இல்லை தீவிரமாகவே இதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது என கூறினார்கள்” என திருமாவளவன் பேசியுள்ளார்.



