தமிழகத்தில் பிரம்மாண்டமான அரசியல் அறிமுகத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அண்டை மாநிலமான கேரளாவிலும் தனது ஆதரவை விரிவுபடுத்தவிருக்கிறதா தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின் பாலக்காடு மற்றும் வயநாட்டில் அண்மையில் நடைபெற்ற விஜய் ரசிகர் சந்திப்புகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, வயநாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் குழு ஒன்று, கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகம் உள்ளூர் பிரிவை அமைப்பதற்கான தொடக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ஞாயிற்றுக்கிழமை பாலக்காட்டில் நடைபெற்ற ரசிகர் கூட்டத்திலும் பெருமளவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டங்களில், கேரளாவில் TVK அமைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் நடிகர் விஜய்க்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. அவை முன்னதாக “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வந்தன. தற்போது அந்த அமைப்புகள் தமிழக வெற்றிக் கழகம் பெயருடன் செயல்படத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், கேரளாவில் தவெக இன்னும் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவில்லை. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது தென்னிந்திய அரசியலில் புதிய சக்தியாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக்குப் பிறகு கேரளாவில் விஜய்க்கான அரசியல் ஆதரவும் அதிகரித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், “TVK Kerala State Committee”, “TVK Kerala Women’s Wing” போன்ற பெயர்களில் சமூக வலைதளங்களில் பல புதிய பக்கங்கள் உருவாகியுள்ளன. இவை ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களை குறுகிய காலத்திலேயே பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாதபோதிலும், கேரளாவில் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்படத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் ரசிகர் ஆதரவு, அரசியல் ஆதரவாக மாறுமா என்ற கேள்வி தற்போது பரவலாக பேசப்படுகிறது.



