காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநில நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு வரும் நீரின் அளவு, கூடுவதும் குறைவதுமாக இருக்கிறது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியுள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இரு அணைகளும் நிரம்பியது.
இதனால் இந்த இரு அணைகளில் இருந்தும், தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் காவிரி நுழைவிடமான கர்நாடக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வந்ததுள்ளது. நீர்வரத்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி இன்று காலை 8 மணி அளவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததுள்ளது. இந்த நீர் வரத்து மேலும் அதிகரித்து இன்று மாலை இரண்டு மணி அளவில் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவேரி கரையோர தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுள்ளது.
மேலும் ஊட்டமலை, நாடார் கொட்டாய் சத்திரம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல்துறையினர், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர், ஆகியோர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.