சமூகவலைதளங்களில், ஜெயிலில் இருந்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய கைதியின் வீடியோ வேகமாக பரவிய நிலையில் கைதிக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயிலில் அடைக்கப்பட்டும் எவ்வித அச்சமும் இல்லாமல் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது என்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், இச்சம்பவம் நடந்த பின் இரு செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஜெயிலில் இருந்து செல்போனில் பேசியவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை சட்டப்பிரிவு 42ன் கீழ் இச்செயல்களில் ஈடுபட்ட அமன்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் சாதனங்களை கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் ஃபிரோஸ்பூர் செண்ட்ரல் ஜெயிலில் செல்போன் விவகாரம் பூதாகரம் ஆவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த காவல்துறையினர், மூஸ்வாலாவை கொலை செய்தவர்களுக்கும் சிறையில் இருந்த சிலருக்கும் தொடர்பு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு செல்போன்களும் இரு சிம்கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பஞ்சாப் சிறைத்துறை அமைச்சராக உள்ள ஹார்ஜோத் பெய்ன்ஸ், அடுத்த ஆறு மாதத்திற்குள் பஞ்சாப் முழுவதிலும் உள்ள சிறைகள் செல்போன் இல்லாத சிறைகளாக இருக்கும் என உறுதி அளித்தார். ஆனால் பஞ்சாப் சிறைகளின் தற்போதைய நிலை ஒரே ஒரு வீடியோவில் அம்பலமாகியுள்ளது.