’ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுவிட்டார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து, ஆன்மீக தலங்களில் தரிசனம் செய்த ரஜினி, திடீரென ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்று, அங்கும் சில கோவில்களில் தரிசனம் மேற்கொண்டார். பின்னர், அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, உத்தரப்பிரதேசம் சென்ற ரஜினி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ஜெயிலர் படத்தை பார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் வராததால், அம்மாநில துணை முதல்வருடன் அப்படத்தை கண்டுகளித்தார் ரஜினி.
ஜெயிலர் படம் பார்த்து முடித்த கையோடு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்திக்க சென்றார் ரஜினி. அப்போது, அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. பின்னர், யோகி மற்றும் குருமார்களின் காலில் விழுவது என்னுடைய வழக்கம், அதனால் தான் அப்படி செய்தேன் என அதற்கு விளக்கமும் கொடுத்தார் ரஜினி. உபி பயணத்தின் போது அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சியை சேர்ந்தவர்களையும் சந்தித்தார்.
அதில் ஒருவர் தான் ரகுராஜ் பிரதாப் சிங் என்கிற ராஜா பையா. இவர், ஜன்சத்தா தளம் கட்சியை சேர்ந்தவர். குண்டா என்கிற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். 1993 முதல் அந்த தொகுதியில் இவர் தான் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவரது வெற்றிக்கு அவர் மீதுள்ள பயம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. உபியில் மாயாவதி ஆட்சியில் இருந்தபோது பாஜக எம்.எல்.ஏ.வையே கடத்தியதால் கைதும் செய்யப்பட்டார் ராஜா.
இதேபோல், தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் கீழ் ஒருமுறை கைதானபோது, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி முலாயம் சிங் ஆட்சிக்கு வந்த அடுத்த 25 நிமிடத்தில் இவர் மீதான அனைத்து குற்றங்களும் நீக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். மேலும், இவரது வீட்டில் சோதனை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி ஆர்.எஸ்.பாண்டே மர்மமான முறையில் கொல்லப்பட்டார். பாஜக-வை ஆதரித்து வரும் இவர், தீவிர சாதி வெறியர் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி பல குற்றச்சாட்டுகளுக்கும், வழக்குகளுக்கும் ஆளான ராஜாவை தான் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவரிடம் பவ்வியமாக கைகூப்பி நின்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன தலைவா ரவுடியுடனே சகவாசமா என கிண்டலடித்து வருகின்றனர்.