நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். பெரியாரின் கொள்கைகளையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய அமைப்பினரும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பெரியாரிய ஆதரவாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தான் சீமான் – பிரபாகரன் சந்திப்பு தொடர்பான விவாதங்களும் எழ தொடங்கி உள்ளன. கடந்த 19-ம் தேதி இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் சீமான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை, அந்த போட்டோவை எடிட் செய்து கொடுத்தவனே நான் தான் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த அவர், சீமானுக்கு பரிசளிக்க வேண்டும் என்று ஒருவர் இதுபோன்ற படத்தை கேட்டதாகவும், அதற்காகவே அந்த படம் உருவாக்கப்பட்டதாகவும், உண்மையில் அப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லை என்றும் கூறினார்.
இதை தொடர்ந்து பிரபாகரனின் அண்ணன் மகனான கார்த்திக் மனோகரன், சீமானின் கூற்றுகள் அனைத்தும் பொய் என்பதை தெரிவித்தார். இதுதொடர்பாக சீமானிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, சீமான ஆவேசமடைந்து முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே ஒளிப்பதிவாளர் சந்தோஷ் என்பவர் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான் எனவும், ஆனால் சீமான கூறிய மற்ற தகவல்கள் அனைத்தும் பொய் என்றும் கூறினார். இதை தொடர்ந்து சீமானை ஆதரித்தும், எதிர்த்தும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சிலர் சீமான் குறித்து தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கி சூடு நடத்த போகிறது என்பது சீமானுக்கு ஒரு நாள் முன்பே தெரியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த வீடியோவில் பேசும் நாம் தமிழர் நிர்வாகிகள் “ ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100வது நாள் அதாவது துப்பாக்கி சூடு நடந்த தினம் நாம் தமிழர் நிர்வாகிகள் சிலரும், சீமானும் தூத்துக்குடிக்கு போவதாக இருந்ததது. நாங்களும் தூத்துக்குடி செல்வது தயாராக இருந்தோம். ஆனால் முன் தினம் இரவு 10.30 மணிக்கு யாரும் அங்கு செல்ல வேண்டாம். மறுநாள் செல்வோம் என்று கூறிவிட்டார். சீமானுக்கு முன்கூட்டியே தெரிந்ததால் தான் அன்றைய தினம் எங்களை யாரும் போகவேண்டாம் என்று சீமான் கூறிவிட்டார். அவரும் அங்கு செல்லவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி துப்பாக்கி சூடு நடந்ததே டிவி பார்த்த பின்னர் தெரியும் என்று கூறியிருந்தார். ஆனால் சீமானுக்கு எப்படி அது ஒரு நாளுக்கு முன்பே தெரியும் என கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள் 13 பேர் கொலைக்கு காரணம் எடப்பாடி பழனிசாமியும், சீமானும் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.