திருப்பூர் மாவட்டம் செரங்காட்டையைச் சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). நிறைமாத கர்ப்பிணியான சத்யா, திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பிரசவத்திற்காக கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மார்ச் 19ஆம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து கோபி வெளியே சென்றுள்ளார். குழந்தையுடன் இருந்த சத்யா சிறிது நேரம் அசந்து தூங்கியுள்ளார். பின்னர், எழுந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. இதுகுறித்து தகவலறிந்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர். குழந்தையை கடத்திய பெண் பாண்டியம்மாள் என்பவரை போலீசார் கைது செய்தனர். திருமணமாகி பல ஆண்டுகளாகியும், குழந்தை இல்லாத காரணத்தால் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பாண்டியம்மாள் 9 மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தற்போது பிரசவத்திற்கு மருத்துவமனை செல்வதுபோல நடித்து குழந்தையை திருடி சென்றது தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.