கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து புதைத்த மனைவி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
டெல்லி காஜியாபாத் என்ற நகரத்தில் வசிப்பவர் சவிதா. இவரின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். அவரின் கணவர் சந்திர வீர்-ஐ அவரின் சகோதரர் கடத்தி சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்திருந்தார் சவிதா. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், எவ்வித துப்பும் துலங்காமல் இருந்தது. சமீபத்தில் இவ்வழக்கில் போலீஸாருக்கு துப்பு கிடைத்தது. சந்திர வீரின் மனைவி சவிதாவுக்கு அவர் காணாமல் போனதில் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சவிதாவை பிடித்து மீண்டும் விசாரித்த போது, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. சவிதாவிற்கும் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருண் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு சந்திரவீர் தடையாக இருந்துள்ளார். இதனால் சவிதாவும், அருணும் சேர்ந்து சந்திரவீரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். அதோடு அரிவாளாலும் வெட்டியுள்ளனர்.

சந்திரவீரை கொலை செய்வதற்கு முன்பே அருண் வீட்டில் ஆழமான குழி ஒன்றை தோண்டி தயார் நிலையில் வைத்திருந்தனர். அதன் பிறகு சந்திரவீரை கொலை செய்து 7 அடி குழியில் போட்டு புதைத்துவிட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி தீக்ஷா சர்மா கூறுகையில், ”சவிதாவும், அருணும் சேர்ந்து சந்திரவீரை கொலை செய்து அருண் வீட்டில் புதைத்துவிட்டனர். பின்னர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் சிமெண்ட் தளம் அமைத்து அந்த வீட்டில் அருண் வசித்து வந்தார். தற்போது தோண்டிப் பார்த்ததில் சந்திரவீர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.