தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தேனி மாவட்டத்தில், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் புதிய தொழில்களை உருவாக்குவதன் மூலம் சுயவேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழக அரசால் ‘வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ அறிவிக்கப்பட்டு, மாவட்டத் தொழில் மையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பின் உச்ச வரம்பு ரூ.15 லட்சமாகவும், அதற்கான மானியம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2023-24ஆம் நிதியாண்டில் கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியானது இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது.
அதில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் https://www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தினர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தினரும் இதில் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்களுக்கு கடன் தந்து அவர்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.