சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், 23 வயதான தனது மனைவியை தாக்கியதோடு, அவரது அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பியைச் செருகி கொலை செய்துள்ளார்.
மணிப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பித்திகலா கிராமத்தில் மே 14 ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பிரதீப் அகாரியா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பிகாபூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பிரதீப் அகாரியா மற்றும் ஹீராபாய் ஆகியோர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். மதுபோதையில் மனைவியை அடிக்கடி தாக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நாளில், ஹீராபாயை கடுமையாக தாக்கிய பிரதீப், அவரது அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பியைச் செருகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கொடூரம் நடந்தபோது தம்பதியரின் நான்கு வயது மகளும் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து, மனைவி மயக்கமடைந்த நிலையில் இருந்தபோது, அவரை மோட்டார் சைக்கிளில் அம்பிகாபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சாலை விபத்தில் காயமடைந்ததாக மருத்துவர்களிடம் கூறி உண்மையை மறைக்க முயன்றுள்ளார்.
ஆனால், பரிசோதனையின் போது ஹீராபாய் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பிரதீப் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரேதப் பரிசோதனையில், ஹீராபாய் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், அவரது உடலில் பல்வேறு வெளிப்புற காயங்களும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அவரது பிறப்புறுப்பிலிருந்து சுமார் 10 அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பி ஒன்று மீட்கப்பட்டதாகவும், அது தடயவியல் பரிசோதனைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



