உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் திருமணமான பெண்ணை காரில் கடத்திச் சென்று அவரை பாலியல் வன்புணர்வு செய்து சாலையில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்தவர் ரிங்கு இஸ்லாம். இவர் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்து லக்னோவில் உள்ள நாகா பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கைசர்பாக் என்ற பகுதிக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்றிரவு ஆலம்பாக் காவல் நிலைய பகுதியில் சாலையோரத்தில் காயங்களுடன் இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டார். அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை டிசிபி அபர்ணா ரஜத் கூறுகையில்” காசர்பாக்கில் அந்த இளம் பெண்ணிடம் இரண்டு இளைஞர்கள் தவறாக நடக்க முற்பட்டுள்ளனர் . இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே காரில் வைத்து அவரது ஆடைகளை கிழித்தெறிந்து பாலியல் வன்புணர்வை செய்துவிட்டு காரில் இருந்து அந்த பெண்ணை வெளியே வீசி இருக்கின்றனர். இதனால் படுகாயமடைந்த அந்தப் பெண் ரயில்வே நிலையத்திற்கு பின்புறம் உள்ள மஸ்ஜித் சாலையிலிருந்து மீட்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம். அடையாளம் தெரியாத அந்த குற்றவாளிகள் மீது பாலியல் வன்கொடுமை காயப்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஓடும் காரில் இளம் பெண் ஒருவர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது