நாடாளுமன்றத் தேர்தலில் 450 உறுப்பினர்களை பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராகுல் காந்தி பாத யாத்திரை செல்வதன் நோக்கம் இந்தியாவை ஒற்றுமையாக இணைப்பதற்காக என்று கூறுகிறார். மோடியின் ஆட்சியில் இந்தியா முழுமையாக இணைந்துள்ளது என்பதனையும், நாடு பெற்றுள்ள வளர்ச்சியினையும் யாத்திரை செல்லும்போது அவர் நன்கு அறிவார். காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்றனர். ஆனால், இன்று நடைபெற்று கொண்டிருப்பது என்ன? இதுதான் காங்கிரசின் நிலைமை, அவர்கள் பேச்சு வேறு செயல் வேறு. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மிகப்பெரிய போட்டி போல் கபட நாடகம் நடத்தினாலும் காந்தி குடும்பத்தில் இருந்து தான் தலைவர் வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஏனென்றால், காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் வாக்காளர் பட்டியல் பற்றி யாருக்கும் தெரியாது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்கவே பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக இருக்கலாம், அதே நேரத்தில் பாஜகவுக்கு அதைவிட நல்லது. பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் 450 உறுப்பினர்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்”. இவ்வாறு அவர் கூறினார்.