திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் கிராமத்தைச் சார்ந்தவர் முருகானந்தம் மனைவி பாலசுந்தரி(40). இவர் கடந்த மாதம் 29ஆம் தேதி உடல்நலம் சரியில்லை என்று தெரிவித்து நாச்சிகுளத்தில் கிளினிக் நடத்தி வரும் முகைதீன் அப்துல் காதர் என்ற நபரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் பாலசுந்தரிக்கு முகைதீன் அப்துல் காதர் ஊசி போட்டு சிகிச்சை வழங்கியதாக சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில் தான் முகைதீன் அப்துல் காதரை நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட பாலசுந்தரியின் உறவினர்களான வீரசேகரன்(42), முகேஷ்(35) உள்ளிட்டோர் பாலசுந்தரிக்கு வழங்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக, அவர் மரணமடைந்து விட்டதாக தெரிவித்தவுடன் இதனை மறைப்பதற்காக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அவரிடம் தெரிவித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் 2.50 லட்சம் பணத்தை 2 தவணைகளாக முகைதீன் அப்துல் காதர் வழங்கியுள்ளார்.
இதற்கு நடுவே பாலசுந்தரி மரணமடையவில்லை, அவர் உயிருடன் தான் உள்ளார் என்ற தகவலை தெரிந்து கொண்ட முகைதீன் அப்துல் காதர், தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் அடிப்படையில் வீரசேகரன், முகேஷ், பாலசுந்தரி உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வீரசேகரன், முகேஷ் உள்ளிட்டோரை நேற்று இரவு கைது செய்திருக்கிறார்கள்.