தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்த அறிவிப்பால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த காலிப் பணியிடம் உருவாகியுள்ளது. அந்த இடத்தை நிரப்பவே தேர்தல் நடத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, வேட்புமனு தாக்கல் ஜூன் 1 முதல் ஜூன் 8 வரை நடைபெறும். மனுக்கள் பரிசீலனை ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜூன் 11. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 18ஆம் தேதி ஒரே நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். தற்போது தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய உறுப்பினர், மீதமுள்ள காலமான 2028 ஜூன் 29 வரை மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக இருப்பார் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நடைபெறும் இந்த தேர்தலில், தற்போதைய தமிழக அரசியல் சமநிலையைப் பொருத்து ஆளும் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிராவிலும் மாநிலங்களவை பதவியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனேத்ரா அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார். அந்த இடத்திற்கும் ஜூன் 18 இடைத்தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
Read more: அழகு நிலையங்களில் ஊசி பயன்பாட்டுக்கு தடை.. அவை அழகுசாதன வகையில் வராது..! – CDSCO கடும் எச்சரிக்கை



